Just another WordPress.com site

ஜல்லிக்கட்டு சர்ச்சையும் கோவில் ஆடைக்கட்டுப் பாட்டுச் சட்டமும்: கவிஞர் தணிகையின் 1154 ஆம் பதிவு

ஜல்லிக்கட்டு சர்ச்சையும் கோவில் ஆடைக்கட்டுப் பாட்டுச் சட்டமும்: கவிஞர் தணிகையின் 1154 ஆம் பதிவு

 

 

 

ஏறு தழுவுதல், பொலி எருதாட்டுதால்(பொலி காளை) மாட்டு வண்டிப் போட்டி, மாட்டுச் சவாரி இப்படி பல வகைப் பட்ட மாடு (மாடு என்றால் செல்வம் என்றும் தமிழ் சொல் உண்டு)தொடர்புடைய நிகழ்வுகள் பொங்கல் அல்லது அறுவடைத் திருநாள் சார்ந்து மாட்டுப் பொங்கல் தினத்தில் அல்லது முன் பின் தொன்று தொட்டு நடைபெறுவது தமிழகத்தில் உண்டுதான்.

மாடு பிடித்தல், கோழிச் சண்டை, குதிரைப்பந்தயம், ஆட்டுக் கெடாச் சண்டை இப்படி மனிதரோடு எவை எல்லாம் தொடர்புடையதாக இருக்கிறதோ அதற்கெல்லாம் ஒரு எல்லைக் கோடு சண்டை வீரம், வெற்றி,சூதாட்டம்,பெட், திருநாள், என்றெல்லாம் கொண்டாடியபடிதான் இருந்தனர். வேட்டி கட்டிய காலத்தில். தமிழ் இனம் ஆடை அணிகலன் எல்லாம் மாறி பொலிவிழந்து போய்விட்டது தமிழ் மொழி போல என்பது எவரும் மறுக்க முடியா மறைக்க முடியா உண்மை. தீபாவளிக்குப் பின்னால் பொங்கல் டாஸ்மாக் விற்பனை உச்சிக்கு செல்லும் அது முக்கியமில்லையா?

சிதம்பரம் கோவிலை கை நழுவ விட்டு விட்டதும், ஆகம விதிப்படிதான் அர்ச்சகர் நியமிக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் கட்டி விட்டதும், நீதி பரிபாலனம் எப்படி சொன்னாலும் அது தான் அமல்படுத்த வேண்டும் அமல்படுத்தப்பட வேண்டும் என குன் ஹா தீர்ப்பு தள்ளப்பட்டதும், சங்கர ராமன் கொலை வழக்கு காணாமல் போய்விட்டதும்,மதுவிலக்குப் போர்கள் நீர்த்து விட்டதும்,ஸ்டிக்கர் கலாச்சாரம், பேனர் விளம்பரங்கள் இப்படி யாவுமே நம்மிடையே உள்ள காலத்தின் காட்சிகள் சாட்சிகள். எனவே இங்கு அரசுக்கும், நிர்வாகத்துக்கும், கட்சிகளுக்கும் ஒன்றும் பெரிய முடிவெடுக்கும் திறம் எல்லாம் தேவையில்லை அது சாதி, சமயம், இந்து சமய அற நிலையத்துறை , ஜல்லிக் கட்டு விழாக்கள் இப்படி எல்லாவற்றிலுமே.நீதியும் அதை வாங்கும் நிதியும் இரு பெரும் சக்திகள்.

பொதுவாகவே தமிழர்களுக்கு இராமலிங்கர் மொழியில் சொன்னால்: வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் மனம் மிக வாடினேன் என்பதற்கேற்ப எல்லாவற்றிலும் கடவுளைக் காணும் கருணை உள்ளம். எனவே மிருகம், வளர்ப்பு விலங்குகள், மரம், பறவை, இயற்கை (சூரியன், நிலா, மலை, காற்று, மண், தீ)எல்லாவற்றையும் வணங்கும் வழக்கம்.

அதுபோலவே பயிர்த்தொழிலுக்கு பெரிதும் பயன்பட்ட ஆடு மாடு, பசு, கோழி, எல்லாவற்றையும் பொங்கல் திருநாள் விழாக்களின் போது ஒரு நாள் ஒதுக்கி அதை முக்கியமாக மாடுகளை குளிப்பாட்டி, அதன் கொம்புகளுக்கு பெயிண்ட் அடித்து, அவற்றுக்கு பொட்டு வைத்து, பூ மாலை சாற்றி கோமாதா எங்கள் குலமாதா, பசுவிற்கும் பால் கொடுப்பதால் ஏகப்பட்ட மரியாதை…பொங்கல் செய்து உணவாகக் கொடுத்து கரும்பையும் கொடுத்து ராஜ மரியாதை.

அதன் பின் ஓய்வு நாளில் நாம் முன்பே சொன்னபடி மாடுபிடித்தல்…இப்ப யார் அப்படி மாடு கன்று வைத்து இயற்கை முறையில் ஏர்க் கலப்பையில் மாடு பூட்டி, இயற்கை உரம் போட்டு, நிலம் உழுது விவசாயம் செய்கிறார் என தேடவேண்டி உள்ளது. இதுவும் மறுக்க முடியா உண்மை. மறைக்க முடியா உண்மை.

பெண்களை மணமுடிக்க இந்த வீர விளையாட்டு ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டது, இவர்கள் பெரும் உருண்டையான யாரும் சாதாரணமாக தூக்க முடியாத கல்லை தூக்குவது, இப்போது நேற்று ஒரு மணவிழாவில் பிளாஸ்டிக் இருக்கைகள் ஒன்றில் மேல் ஒன்றாக அடுக்கி அதில் பெண்ணை மாப்பிள்ளை தூக்கி தூக்கி அமர வைக்கிறார் அதை படப்பதிவு செய்து நண்பர்கள் முக நூலில் வெளியிட்டிருந்தனர். ஒவ்வொரு முறை அமர்ந்து இறங்கியபோதும் ஒரு பிளாஸ்டிக் இருக்கையின் உயரம் கூட்டப்பட்டு போடப்பட்டது, அதே போல் போட்டிகளில் இசை நாற்காலி போன்றவை…பிரபலம்.

அதே போல பிள்ளையில்லாத பெண் வறடிக்கல்லைச் சுற்றுவது அதன்பின் பெருமாள் முருகன் கதைதான். எல்லாம் மாறி விட்டன.காலம் மாறிவிட்டது. இதைப்பற்றி எல்லாம் எழுதப்போனால் மிகவும் ஆழமாக அகம், புறம், திணை என்றெல்லாம் போய், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்.பாலைக்கு எல்லாம் போக வேண்டும். தீவனம் தின்ன வரும் கோழியை சேவலை விரட்ட காதணியை பாம்படத்தை கழட்டி வீச வேண்டும் (இப்போது களவாடாமல் குடிகாரக் கணவனோ, திருடனோ விட்டு வைத்திருந்தாலும் பெண்கள் களத்தில் நெல்மணிகள் காயவைக்குமளவு இருக்கிறார்களா வீசி அடித்து துரத்துவார்களா என்பது எல்லாம் கேட்கக் கூடாத கேள்விகள்.)மேலும் யானை கட்டிப் போரடித்தால் மாளாது என்று சேனை கட்டி போராடிப்பராம்.கண்ணகி இடது கொங்கையை திருகி எடுத்து எறிந்து மதுரையை எரிக்க வேண்டும் அதிலும் சிறிய குழந்தைகள், பெண்கள் , பெரிய வயது முதிர்ந்தோர் எல்லாம் தீயில் எரியாமல் மிகுதியாக இருக்கிற ஆண்கள் மட்டும் எரிந்து பட வேண்டும்….

கூட்டம் கூட வேண்டும், பெரும் கூட்டமாக இருக்க வேண்டும், தேர்தல் வருகிறது.அதை நடத்த நாங்கள் தான் முயற்சி செய்தோம். எங்களை மறந்து விடாதீர் தேர்தல் நெருங்குகிறது… ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் அதில் சில பேர் சாக வேண்டும் அதற்கு அரசும் கட்சிகளூம் ஓலம் பாட வேண்டும், இழப்பீடு வழங்க வேண்டும். தந்தையும் தாயும் தமது வீட்டுக்கு ஆகும் என நினைத்த பிள்ளையை இழக்க வேண்டும். இதுதான் அந்த சில நாட்களில் நாம் காணப்போகும் வீர விளையாட்டின் இன்பம்.எல்லாக் கட்சிகளுமே பேனர் விளம்பரப் பதாகைகள் வைத்துக் கொள்ளலாமே ஜல்லிக் கட்டு நடக்கும் நிகழ்ச்சி வளாகத்தில் மைதானத்தில். அது பெரும் வாக்கு சேகரிப்பு முகாமாயிற்றே.

தமிழை நல்லா சொல்லித் தர யாரும் இல்லை இங்கே…ஆசிரியர்களே போலிச் சான்றிதழ் கொடுத்து அரசியல் வாதிகளின் உதவியுடன் அரசு வைத்த தேர்வில் தேறி ஆசிரியப் பணி செய்து வரும் காலத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியரே மது குடிக்க படிக்கும் பையன்களையே சைட் டிஸ் (கடித்துக் கொள்வதற்கு) நிலைக்கடலையை வறுத்து எடுத்து வரச் சொல்லும் காலம் இது…எவ்வளவு தமிழர்கள் தமிழ் முறைப்படி வாழ்ந்து வருகிறோம்…ஜீன்ஸ் போடக் கூடாது, T சர்ட் போடக்கூடாது, லெக்கின்ஸ் போடக்கூடாது எனக் கோவில்களில் தடை விதிக்கும் காலம்.ஆனால் பள்ளித்தலமனைத்தும் கோவில் செய்குவோம் பாரத தேசம் எனத் தோள் கொட்டுவோம் என்ற பாரதியின் வரிகளை பேசிக்கொண்டே கல்லூரிகளில் லெக்கின்ஸ் போட பெண்களை அனுமதிப்போம் அந்தக் காலத்தில் நாம் இருக்கிறோம்.

ஆனால் பார்ப்பன அர்ச்சகர்களுக்கு ஏற்ப உச்சிக் குடுமிகள் இல்லாமல் நவ நாகரீகத்துடன் கிராப் தலைகளுடன் நீதிமன்றங்கள் ஆட அவர்கள் உண்மையிலெயே கோவில்களில் பாதி நிர்வாணமாக வலம் வர, கோவில்களின் சிற்பங்கள் ஆடையின்றி இருக்க வந்து வணங்குவோர் இப்படித்தான் இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்மானிக்கிற காலம் அது தொலைவில் இல்லை.

அப்படித்தான் இந்த ஜல்லிக்கட்டு பாரம்பரியமும். உச்ச நீதிமன்றம் சொல்ல, அதற்கு மறுபடியும் பிராணி வதை தடுப்பு அதற்கு மேல் முறையீடு செய்ய, அதற்கு தமிழக அரசு எச்சரிக்கை மனு செய்து அது பற்றி ஏதும் தடை உத்தரவு தரும் முன் எமது தரப்பையும் விசாரிக்க விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் (தேர்தல் வருகிறது ) எனச் சொல்ல எல்லாமே உச்ச நீதிமன்றமே தீர்மானிக்கும். தீர்மானிக்கட்டும்.

கோவில் ஆடைக்கட்டுப்பாடு பற்றி இரு வேறு கருத்துகள் உலவுகின்றன. பார்ப்பனமும், ஆகமமும், கோவில் சிலைகளும் காமம் பயிற்றுவிக்க எதற்கிந்த கட்டுப்பாடு? கேரளா போன்ற பகுதிகளில் மேற் சட்டையைக் கழட்டச் சொல்லியே பக்தர்களை உள் அனுப்பும் கூட்டம்..காரணம் சாமியா பூணூல் ஆசாமியா? எல்லாம் செய்யலாம் கர்ப்பக் கிரஹம் மட்டும் வேறு யாருமே செல்லக் கூடாது.சுகி சிவம் சொல்வது போல போப்,மௌல்வி,அர்ச்சகராக, அய்யப்ப பூஜகர்களாக பெண்கள் வந்து விட எந்நாளும் முடியாது. ஆனால் அவர்களுக்குத்தான் பக்தி அதிகம்.அம்மா சாமி மேலும்,அரிசிவசம்போ மேலும்…

கோவில்களில் ஆடைக்கட்டுப்பாடு பற்றி ஒரு 18 வயது இளையவரையும், 40 வயது ஒரு திருமதியையும் பேட்டி எடுத்து கருத்து கேட்டேன் . ஆம், இது நல்லதுதான், ஏன் எனில் கோவிலில் எப்படி வேண்டுமானாலும் ஆடை உடுத்தி வருகின்றனர். லெக்கின்ஸ், டாப்லஸ், ஸ்லீவ்லஸ் இப்படி எல்லாம் வரும்போது கூட்டத்தில் நெருக்கி அடித்துக் கொள்கின்றனர். கோவிலுக்கு எதற்கு வருகிறார்களோ அந்த குறிக்கோள் அடிபட்டு போய்விடுகிறது என்றனர்.சாமி கும்பிடும் நோக்கம் சிதைந்துதான் போகின்றது என்கின்றனர்.

சரி எதற்காக T சர்ட் வேண்டாம், ஜீன்ஸ் வேண்டாம் என்கின்றனர் என்றால் அதில் இடம்பெறும் வசனங்கள்,துவைக்காமலும் போட்டிருக்கும் நிலை, கிழித்து விட்டுக் கொள்ளும் மாடல்கள். சரி பொது இடங்களில் கல்லூரிகளில் லெக்கின்ஸ், அனுமதிக்கலாமா? அரைக்கால் சட்டை போட்டுக் கொண்டு தொடை தெரிய மாடுகள் திரிகின்றனவே அதற்கென்ன சொல்வது? கேட்டால் அதெல்லாம் அவர்கள் ப்ரீடம், உங்களுக்கு என்ன?

சரி இவற்றை குற்றம் சாட்ட அரசுக்கு, கோவில் நிர்வாகத்துக்கு அருகதை வேண்டாமா? உண்மையில் புத்தம் ஏறு கொண்டிருந்த காலத்தில் அதன் வீரியம் குறைக்க எல்லாமே துறவை மேற்கொண்டால் இந்து மதம் என்னாவது? குடும்பம் தாம்பத்யம் என்னாவது என்றுதானே இது போன்றா கோவில் சிற்பங்களும் அஜந்தா, எல்லோரா,ஓவியங்களும் கஜிரோஹா சிற்பங்கள் எல்லாம் வந்தன…

மேலாடை கூட இல்லாத நிலைதானே பண்டைய நிலை அதற்காக அந்த காலத்துக்கே சென்று விட முடியுமா? கோவில் சிலைகளில் பெரும்பாலும் ஆடை நெகிழதல்கள் ஒரு சிற்ப வேலைபாடாகவே மேலாடை இல்லாமலும் மேகலை இடை நில்லாமலும் இருக்கின்றது என்பதை மறுக்க முடியுமா?

பெண்கள் வேண்டுமென்றால் சேலை கட்டியும் கூட இடையில் இறக்கி(லோ ஹிப் ) கட்டி இருந்தால் அதை எப்படித் தடுக்க முடியும்? எவர், யார் அல்லது அர்ச்சகர் சென்று தடுக்க முடியுமா? ஆரம்பத்தில் இந்த சட்டம் நடைமுறைக்கு வர வசதியாக எல்லா பெண்களுக்கும் பெண்காவலர்கள் அல்லது கோவில் நிர்வாகிகள் ஆடை போட்டது போல எல்லா காலங்களிலும் செய்ய முடியுமா?

உங்களுக்குத் தேவையென்றால் ஆகமம், முதலாம் மூன்றாம், ஏழாம் நூற்றாண்டில் ஆகி வந்த ஆகமம் 21 ஆம் நூற்றாண்டிலும் அமல்படுத்தப்படும், சிதம்பரம் கோவில் போன்றவை முதலாம் நூற்றாண்டில் பராந்தக சோழனால் தங்க ஓடு வேய்ந்தது ஒடியா தீட்சிதர்களுக்கு சொந்தமானது எனத் தீர்ப்பு சொல்லப்படும் அல்லது எதிரணியினர் போதிய சாட்சியங்களுடன் நிரூபிக்க வில்லை என்று சொல்லி விட்டு விடலாம்…

ஜல்லிக்கட்டு, கோவில் ஆடைக்கட்டுப்பாடு போன்றவை ஆகம விதிகளைப் போல அறவே தள்ளி விட வாய்ப்பில்லை. நன்றாக ஒரு சேர ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் படவேண்டியதாக உள்ளது. சட்டம் அமலானாலும் அதில் இரண்டு பக்கமுமே நியாயம், அநியாயங்களும் இருப்பதாகவே படுகிறது.

இரண்டு தீர்ப்புகளுமே சந்தேகத்திற்கிடமானவை. அறுதி இட்டு இறுதியான முடிவெடுக்க முடியாதவை. சமுதாயத்தில் பெருவாரியான மக்கள் வேண்டுகிறார்கள், விரும்புகிறார்கள் என்ற காரண்த்திற்காகவே சமுதாயத்திற்கு தீமை விளைக்கும், மானுடத்திற்கு துன்பம் தரும் முடிவை நீதி தீர்ப்பாக தந்து விட முடியாது. தந்து விடவும் கூடாது. இவை எல்லாம் நன்கு ஆலோசித்து ஆய்வு செய்து இறுதித் தீர்ப்பு செய்ய வேண்டிய பிரச்சனைகள்.

எமது கருத்துகள் இந்த இரண்டு பிரச்சனை பற்றி பேசும்போது வெளிவர வேண்டியது என்ன வெனில் உயிர் போகாமல் ஜல்லிக்கட்டு நடத்தப்பட முடியுமா? கோவிலுக்கு ஆடைக்கட்டுப்பாடு செய்யும் கோவில் நிர்வாகம் யாரை சார்ந்ததாய் இருக்கிறது?கோவில் என்பது பொது என்றானபோது யார் யாருக்கு கட்டுப்பாடு விதிப்பது? விதிக்க முடியும்?
எல்லாம் முதலில் பயிற்றுவிக்கப்பட வேண்டும் .

மந்திரியும் ஆட்சியும் மதுவைக் குடித்து விட்டு ஆடையின்றி தெருவில் மனிதம் விழுந்து கிடப்பது கண்டும் மதுக்கடையை எடுக்க மாட்டோம் என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டு மறுபக்கம் ஜல்லிக் கட்டும், கோவில் ஆடைக்கட்டுப்பாடும் செய்ய நினைபப்து பெரும் கேலிக்கூத்து. இங்கு எதுவுமே சரியில்லை. சரியாக சரியாக்க நினைக்கும் பாண்டிச்சேரி ரங்கசாமி போன்றோர் தப்பித்துக் கொள்கிறார், அரவிந்த் கெஜ்ரிவால் போன்றோர் சிக்கிக் கொண்டு அன்றாடம் அல்லல் அனுபவிக்கிறார்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s