Just another WordPress.com site

ஜல்லிக்கட்டுக் கதிர்களும் பீட்டா அதிர்வலைகளும்: கவிஞர் தணிகையின் 1158 ஆம் பதிவு

ஜல்லிக்கட்டுக் கதிர்களும் பீட்டா அதிர்வலைகளும்: கவிஞர் தணிகையின் 1158 ஆம் பதிவு

மறுபடியும் பூக்கும்

 


விலங்கினங்களை நெறி முறைகளுடன் கையாளுதல் அல்லது சிகிச்சை அளித்தல் அதாங்க பீட்டா – பீப்பிள் பார் தி எதிகல் ட்ரீட்மென்ட் ஆப் அனிமல்ஸ் பற்றி எல்லாம் நமக்கு கவலை இல்லைங்க, ஜல்லிக்கட்டு மனுஷங்க உயிர் போகாம,ஒரு குடும்பமும் சேதமாகம நடத்த முடியுமா? அதாங்க நம்ம கேள்வி எல்லாம்.

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டாம் என தடை கோரும் வேலை எல்லாம் எமக்கில்லை.ஆனாலும் உலகில் இந்தியாதான் கால்நடைச் செல்வத்தில் முதலில் இருக்கிறது என்ற பெருமையிலும் எனக்கு பங்கு இந்தியன், தமிழன் என்ற காரணங்களுக்காக உண்டே தவிர எமது குடும்பத்தில் தாய் மாடு வைத்து பராமரித்து பால் கறந்தார் எனச் சொல்லக் கேட்டதுண்டே தவிர மாடு வைத்து பராமரிக்கும் அனுபவம் கொடுப்பினை எல்லாம் நமக்கு இல்லை.

ஆனால் ஆவின் பால் வாங்குவதில்லை. நமக்கு உள்ளூர்க்காரர்கள்தான் பால் ஊற்றுகிறார்கள்.30 ரூபாய் லிட்டருக்கு பாலுக்குக் கொடுத்தாலே நல்ல தயிர், வெண்ணெய்- நெய் எல்லாம் கிடைக்கிறது. பால் கறக்கும் மாட்டின் மடியை அந்நியர் எவருமே தொட்டு பால் கறக்க விடாது. ஆடு, மாடு, அதிலும் எருது, கோழி ,பூனை,நாய் எல்லாமே வீட்டில் வளர்க்கப்பட்ட போதும் அதற்கு ஒரு குணம் உண்டு. நாம் அதன் நட்பாய், தோழமையாய், உற்ற துணையாய் இருந்தால் நேசிக்கும் நமைக் காக்கும் தாக்காது. பிரிந்து சென்றாலும் நமது வீட்டை நோக்கி வந்து சேர்ந்து விடும். ஆனால் அந்நியர் எவரையுமே அருகே விடாது மீறினால் மிருகமாகி தாக்கும், அப்படி அவற்றால் தாக்கப்பட்டு மனிதர்களின் குடல் சரிந்த வராலாறுகள், உதை வாங்கி எலும்பு உடைந்த வரலாறுகள் நிறைய உண்டு.

 

நாம் எந்த வகையிலுமே வெளி நாட்டு வகையின மாடுகளுக்கு வக்காலத்தும் வாங்க இதை எழுதவில்லை. பீட்டா தலைவி ஒரு நாய்க்கு ஆடை மாட்டி விட்டு தாம் ஆடை அணிவதைப் பற்றி கவலைப்படாத நிர்வாண போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் நடிகை என்பது, இந்த ஜல்லிக்கட்டுத் தடை வாங்கிய பீட்டாக்காரர்கள் எல்லாமே மனிதர் பற்றி கவலைப்படுவதில்லை விபத்து என்றாலும் மனிதர் துடித்துக் கிடந்தாலும் அவரை விட்டு கிடக்கும் விலங்கை, கால்நடையைத் தான் முதலில் கவனிப்பர், என்றும், விபத்து நேர்கிறதே என்று பேருந்தில், ரயிலில், விமானத்தில்,கப்பலில் போக்குவரத்து செய்யாமல் இருக்கிறோமா என ஜல்லிக்கட்டு வேண்டி நமது நண்பர்கள் அனைவருமே ஒரு சேர குரல் கொடுத்து வருகிறார்கள் ஒரு சிலர் தவிர. (வா.மணிகண்டன், எனைப்போன்ற இன்னும் சிலர் இந்த ஒரு சிலரில் அடக்கம்). எல்லா உயிர்களுக்கும் மதிப்பு ஒன்றுதான்.ஆனால் மனித உயிர் போனால் எல்லா உயிர்களின் மதிப்பையும் விட நமக்கு சோகம் அதிகமாக துன்பம் அதிகாம இருப்பது உண்மைதான்.எனவே உயிர்கள் அரிது, அதிலும் மனித உயிர்கள் அரிதிலும் அரிதில்லையா?

அவர்களுக்கு எல்லாம் நாம் கேட்பது ஒன்றே ஒன்றுதான். அது: எந்த மனித உயிருக்கும் சேதமின்றி நடத்த முடியுமா ஜல்லிக்கட்டை,? எப்போது எங்கே ஜல்லிக் கட்டு நடந்தாலும் சில குடும்பங்களில் இருள் புகும், சில பல உயிர்கள் பறிகொடுக்கப்படும்.இது விளையாட்டு என்பதை விட ஒரு போர்க்களம் போல மதுக்குடித்து விட்டு, அரசியல் பேனர்கள் வைத்துக் கொண்டு, ஒருவருக்கொருவர் பழி தீர்த்துக் கொண்டு, சூதாடிக் கொண்டு சூறையாடியபடி இருக்கும் களம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

மாட்டுக்கு துன்புறுத்தல் என்ற பேச்சுக்கே நாம் புகவில்லை. மனிதர்களின் உயிருக்கு உத்தரவாதமில்லா ஒழுங்கற்ற கூட்டத்தின் கூச்சல் ,குழப்பம் அதை நெறிப்படுத்தும் நிலையில் இல்லா அரசு ஆட்சி, சாதாரண நாளிலேயே கொலை, கொள்ளை, செயின் பறிப்பு இதைப்பற்றி கேட்காத நாதியற்ற அரசு, கட்சிகள் இதில் ஈடுபடும் மக்களின் உயிர்களுக்கு என்ன உத்தரவாதம் அளிக்க முடியும்?

அப்படியே உத்தரவாதம், பாதுகாப்பு அளித்தாலும் மருத்துவமனை எத்தனை குடல் சரிந்து வரும் உயிர்களை காப்பாற்ற முடியும்? மருத்துவர்களைக் கேட்டால் கதை கதையாக உயிர் போகும் கதை சொல்கிறார்கள் . அப்படியே தப்பித்தாலும் இந்த வீர விளையாட்டு வாழ்க்கை முழுதும் முடமாகிப் போன உயிர்களுக்கு பிறர்க்கு பாரமாகிப்போன உயிர்களுக்கு காலமெல்லாம் இரணமாகிப் போன முக்கல் முனகலான சகிப்புத் தன்மையற்ற குடும்பத்தாரின் வசவுகளையல்லவா வாழ் நாள் எல்லாம் பெறமுடியும். இதற்கு உயிர்போவதே பரவாயில்லை எனவும் தோன்றும்.

வாகனம் போக்குவரத்து யாவுமே இயந்திர இயக்கம். மனிதரால் இயக்கப் பெறுவது. ஜல்லிக்கட்டையும் போக்குவரத்தையும் இணைத்து ஒப்பிட்டுப் பேசுவதே அறியாமை. ஒரு ஆபத்து என்றால் வாகனத்தை இயக்கத்தை நிறுத்தி விட்டு வந்து விடலாம். அது அன்றாடம் அவசியத் தேவையான வாழ்வின் முறை. இது ஒரு நாள் கேளிக்கை, கூத்து. கூட்டம் சேர்ந்து அடிக்கும் கும்மாளம். மோப் என்பார்களே அது போல..குறிக்கோளற்ற கூட்டம் அடிக்கும் சமுதாய வன்முறை. இதை விட்டு விட முடியும். போக்குவரத்தை விட முடியாது. அது அன்றாடத் தேவை பலருக்கும் பலருக்கும் உயிர்காக்கும் அவசியமும் கூட. இது அப்படி அல்ல.விளையாட்டு வினையாகும் கோலம்.அது விபத்தாய் மாறுவது மனிதக் கோளாறு அல்லது எந்திர பராமரிப்பின்மை, இது அப்படி அல்ல தெரிந்தே மரணத்தின் கையை எடுத்து தம் மேல் வைத்துக் கொள்வது.

ந்யூஜிலாந்தில் பாலுக்காக வருடம் ஒரு முறை கன்றை தரிக்க வைத்து ஈன வைத்து கன்று காலிகளை கொன்று குவித்து பால் சுரண்டல் செய்யப்படுகிறதாம் மனிதப் பிழைகளால். மனிதர்கள் நினைத்தால் எதையும் செய்ய முடியும்..நல்லதும் கெட்டதும் மிருகத்துக்கும், பறவைக்கூட்டத்துக்கும், பிற உயிர்களுக்கும்…

 

ஆனால் மனிதர்களுக்கு மனிதர்க் கூட்டத்திற்கு அவை என்றுமே கால்நடைகளும் பிற உயிர்களும் நன்மை செய்யவே இருக்கின்றன வாழ்கின்றன என்பதை மனிதர் ஒருபோதும் மறந்து விடுவதற்கில்லை.மறுத்து விடவும் முடியாது.

சிகரெட் புகைப்பவர் கூட்டம் அதிகமாக இருக்கிறது என்பதற்காக அது நல்லதாகிவிடாது
மதுக் குடிபபர் கூட்டம் அதிகமாக இருக்கிறது என்பதற்காக அது தேவையாகிவிடாது
அது போல ஜல்லிக்கட்டுக்கு அதிகமான ஆதரவு இருக்கிறது என்பதற்காக அது நீதியாகிவிடாது.

எல்லாரும் மகிழும்படியான விழாக்கள் வேண்டும். எல்லாரும் மகிழும்போது சில குடும்பங்களின் அடிமடியில் அடிவயிற்றில் தீக் கங்குகள் செருகப்பட்டு எந்நாளும் சோகமாகும் துன்பக்கணைகள் தாங்குவதான ஜல்லிக் கட்டு விழாக் கொண்டாட்டமல்ல, பெரும் கூட்டத்தின் ஒரு கட்டவிழ்ப்பு.

எமது கருத்து சிலருக்கு நெருடலாகவும், சிலருக்கு முரணாகவும் இருக்கும் ஆனால் மனிதம் வளர்ந்தபடியே இருக்கிறது .விவசாயி இப்போது நம்மாழ்வார் சொல்லும்/சொல்லிய விவசாய முறைக்கு மறு சுழற்சிக்கு ஆட்பட்டாக வேண்டிய நிலை. எல்லாமே இன்று எந்திர முறையிலான விவசாயம், செயற்கை உர மேலாண்மை, ஆடை அணிகலம் எல்லாமே கவர்ச்சி நோக்கி,மண்ணில் கை வைக்க விரும்பும் கல்வி முறை விதி விலக்கு. விவசாய கூலிக்கு ஆட்கள் இல்லை. அரசும் வங்கிகளும் மல்லையாக்களுக்கு பல்லாயிரம் கோடியும் கொடுக்கும் தள்ளுபடியும் செய்யும். இன்னும் விவசாயிகள் பேர் சொல்லி வங்கிக் கடன் பெற்று தள்ளுபடி செய்து கொண்ட பெருமுதலாளிகளும், அரசியல் பிரமுகர்களும் நிறை நாடு இது. எனவே அவர்கள் கைப்பாவையாகவே நமது எண்ணங்களும் கூத்தாடக் கூடாது என்பதுவே எமது தாழ்மையான எண்ணப் பதிவும். காலத்தை எவருமே பின்னோக்கித் தள்ள முடியாது ஜல்லிக்கட்டு நமது பாரம்பரிய தமிழர் விழாதான் . சந்தேகமில்லை.

ஆனால் தமிழ் மொழியும் நமது தாய் மொழிதான். அதை முதலில் நம்மால் பிழையின்றி நமது பிள்ளைகளுக்கு எழுதப் பேச ஏற்பாடுகள் செய்திருக்கிறோமா? ஏற்பாடுகள் செய்ய முடியுமா? அதைப்பற்றி யோசிப்போம். ஜல்லிக்கட்டு அவசியமா? தாய் மொழிக் கல்வி அவசியமா என்று நீங்களே முடிவு செய்து கொண்டு கேள்வி கேட்டுப் பாருங்கள் உங்களுக்குள்ளும் எமக்குள்ளும் உண்மை சுடுகிறது. நமது பிள்ளைகளை மட்டுமல்ல எந்த பொது இடத்திலுமே நல்ல தமிழே எழுத பேச முடியா நாட்டின் தொய்வில் நாம் விழுந்து கிடக்கிறோம். அதற்கு நம்மாலானதை முதலில் செய்ய வேண்டும் என்பது தான் ஜல்லிக்கட்டு நடத்துவதா வேண்டாமா என்பதற்கும் முன்னால் நம் முன் நிற்கும் கவலை.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

 

 

 

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s