Just another WordPress.com site

ஜல்லிக்கட்டு பற்றிய பின்னோட்டங்கள்:2.கவிஞர் தணிகையின் 1162 ஆம் பதிவு.

ஜல்லிக்கட்டு பற்றிய பின்னோட்டங்கள்:2.கவிஞர் தணிகையின் 1162 ஆம் பதிவு.

மறுபடியும் பூக்கும்.

ஜல்லிக்கட்டு பற்றி நல்ல ஆரோக்கியமான விவாதங்களை எமது விடியல் பக்கங்கள் அல்லது டான்பேஜஸ் டாட் காமில் பின்னோட்டமாக எழுதும் தகுதியுடைய எழுத்துகளை , கருத்துகளை பதிவு இடுவதாக முன்பே கூறியிருந்தேன். அதன் தொடர்ச்சியாக தற்போது திரு.ஆனந்த் அவர்கள் ஒரு அருமையான பின்னோட்டத்தை எழுதியுள்ளார். அவரிடம் எந்தவித பெரிதான கருத்து வேறுபாடும் என்னால் காணமுடியவில்லை.

எனவே முன்பு சொன்னபடி அவரது கடிதத்தை அப்படியே இங்கு உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். இது பற்றிய ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்களை வரவேற்கிறேன். தகுதியுடன் இருப்பின் முன்னர் குறிப்பிட்டுச் சொன்னது போல் தவறாமல் தேவைப்பட்டால் பிரசுரிப்பதாகவும் உறுதி அளிக்கிறேன்.
நன்றி

 

Ananth to dawnpages

அடுத்த புயலுக்கு சென்னையும் கடலூரும் தாங்குமா? ஊரெங்கும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நீர்நிலைகளை எப்படி மீட்பது? அடுத்த தேர்தலிலாவது நேர்மையான ஒருவரை தேர்ந்தெடுக்க நமக்கு திராணி இருக்கிறதா? வளர்ந்து வரும் சாதி, மத அடிப்படைவாதங்களை எப்படி அடக்குவது போன்ற தேவையற்ற பிரச்சனைகள், விவாதங்களை காட்டிலும் நமது பண்பாடு, கலாச்சாரம், புண்ணாக்கு போன்றவற்றை காக்கவேண்டிய இக்கட்டான கட்டாயத்தில் தமிழகம் இருப்பதால் ஜல்லிக்கட்டு பற்றி நானும் எனது கருத்தை கூறவேண்டியது அத்தியாவசியமாகிறது.

 

ஏறு தழுவுதல், மஞ்சு விரட்டு, ஜல்லிக்கட்டு மற்றும் பலவிதமாக நடத்தப்படும் இந்த வீர விளையாட்டுகள் குறித்து பேசும்போதெல்லாம் எனக்கு தோன்றுவது என்னவோ, இவைகள் யாவும் இதை வீர விளையாட்டு என எவ்விதம் வகைப்படுத்துகின்றனர் என்பது தான். பல நூறு வருடங்களுக்கு முன்னர் விவசாயம், வாணிபம் தாண்டி வேறு தொழில்கள் நம்மிடம் இல்லை. ஆகையால் பொழுதுபோக்க வேண்டிய கட்டாயத்தில் சில பல விளையாட்டுகள் கண்டறிந்தோம். அவற்றுள் உயிரை பணையம் வைத்து விளையாட்டுகளை ‘வீர விளையாட்டு’ என வகைப்படுதினோம். ஆனால், அது மனிதன் தன் அறிவை அதிகம் பயன்படுத்திக்கொள்ளாத காலம்.

 

மாறாக கடந்த 200 ஆண்டுகளில் மனித சமூகமாக நாம் மிகப்பெரும் வளர்ச்சியை கண்டுள்ளோம், மனிதம் அறிவு முதிர்ச்சியை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. அரசனும், அடிமை ராஜ்ஜியமும் வீழ்ந்து, மக்களாட்சியை கொண்டுவந்துள்ளோம். 1000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த வீரமென்பது தற்போது வன்முறை. அப்போது போர் என்றால் பெருமை, தற்போது போர் ஒரு பெரும்சோகம். இதை அறிவுப்பூர்வமாக உணர முடிந்தால் ஜல்லிக்கட்டுக்கு இவ்வளவு தூரம் நாம் மெனக்கெட தேவையில்லை. ஆனால், என்னுடைய குழப்பம் எல்லாம் மேற்கூறிய அறிவு வளர்ச்சி, மக்களாட்சி போன்றவை தமிழத்திற்கு பொருந்துமா என்பதுதான்.

 

சுயசாதி கர்வமும், அதற்காக மேற்கொள்ளும் கொலைகளும், கலவரங்களும் இங்கே இன்றும் வீரமாக கருதப்படும் போது ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டு என கொள்வதில் பெரிதாக கருத்துப்பிழை ஒன்றுமில்லை எனவே தோன்றுகிறது. என்னடா, ஜல்லிக்கட்டு ஆதரிப்பவர்களை சாதிவெறியன் என்கிறாயா? என நீங்கள் கேட்டால், தமிழர் மரபு எனப்படும் இதை எத்தனை சாதியினர் இபோட்டியை நடத்துகின்றனர், பங்கேற்கின்றனர் என்பதை உற்றுநோக்குங்கள் என்பேன். ஆம் என் அடுத்த சந்தேகம், இது தமிழர் விளையாட்டு தானா என்பது தான். மதுரை மண்டலத்தில் வாழும் ஒன்று அல்லது இரண்டு ‘ஆதிக்க சாதியினர்’ 100க்கும் குறைவான கிராமங்களில் நடத்தும் இதை எப்படி தமிழர் பண்பாடு என ஏற்பது? வேண்டுமென்றால் அந்த சாதிக்கான பண்பாடு எனலாம்.

 

ஒருசில தாழ்த்தப்பட்ட சாதியினரும் தற்போது ஜல்லிக்கட்டில் பங்கேற்பதெல்லாம், அரசியல் சாசனம் மற்றும் பொருளாதார வளர்ச்சியால் சாத்தியப்பட்டதே தவிர ஒரு 30-40 ஆண்டுகாலம் பின்னோக்கி பார்த்தல் இதுவெறும் சாதி சார்ந்த போட்டிகள் மட்டுமே என்பதை புரிந்துகொள்ளலாம். இதற்கு நல்ல உதாரணம், இன்றும் ஜல்லிக்கட்டு என்பது குறிப்பிட்ட ஆதிக்க சாதியினர் வாழும் பகுதிகளில் மட்டுமே கடைபிடிக்கப்படுவதை காணலாம். இன்னும் குறிப்பிட்டு சொல்லப்போனால் இந்த வருடம் இப்பிரச்சனை அதிகம் அரசியலாக்குவதே அந்த சமூகத்தினரின் ஓட்டு வங்கிக்காக தான். தவிர, என்னை பொறுத்தவரை பீட்டா வந்து தான் இதை நிறுத்தவேண்டும் என்பதில்லை. 10 வருடம் விட்டிருந்தால் ஜல்லிக்கட்டு தானாகவே காணாமல் போயிருக்கலாம் அல்லது வேறுமாதிரியான மாறுபாட்டை சந்தித்து இருக்கலாம்.

தமிழகம் மேற்கொண்டு வரும் நகரமயமாக்கல் அத்தனை அதிவேகமானது. என்ன தான் இருந்தாலும் 1000 ஆண்டுகால நடைமுறை நிறுத்தலாமா என்கிறீர்களா? 1000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த பல கலாச்சார காட்டுமிராண்டித்தனமான பழக்கங்களை நாம் விட்டோழித்துள்ளோம். அதில் ஜல்லிக்கட்டும் இணைந்தால் இங்கே பெரிதாக எதுவும் மாறிவிடப் போவதில்லை. மொத்தத்தில் என்னுடைய கருத்து ஜல்லிக்கட்டு நடத்தவே கூடாது என்பதல்ல. முன்னமே சொன்னது போல நாம் தலையில் வைத்து கொண்டாடும் அளவுக்கு அது ஒன்றும் மிக முக்கியமான பிரச்சனை இல்லை.

 

நம் உடனடியாக கவலை கொள்ள பல பிரச்சனைகள் இருக்கிறது. நமது ஆற்றலை, நேரத்தையும் அறிவார்ந்த செயலுக்கு பயன்படுத்தலாம். ஒரு குறிப்பிட்ட சாதியினர், தங்களது சாதியின் ‘வீரமாக’ கருதும் ஒரு நிகழ்விற்கு என்ன ஏதுவென்றே தெரியாமல் கண்டமேனிக்கு கருத்து சொல்லாதீர்கள் என்பது தான் நான் சொல்லவருவருவது. முக்கியமாக அடுப்படிக்குள், கேஸ் அடுப்பில் பொங்கல் வைத்து கொண்டாடுவோர் ஜல்லிக்கட்டு மூலமாக மட்டுமில்லாமல் தமிழர் பண்பாட்டை, நெறிமுறையை உங்கள் வீட்டிலிருந்து கூட காப்பாற்றலாம். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? பின்குறிப்பு: கலப்பின பசு, நாட்டு மாடுகள் என அடிப்படை அறிவுகூட இல்லாமல் பார்வர்டு மெசஜ் அனுப்பும் இணைய புரட்சியாளர்கள் குறித்து அடுத்த பதிவு விரைவில்..!

January 16, 2016 at 4:04 pm Edit

விவாதம் தொடரும்…பங்கெடுக்கும் நபர்கள் தொடரும் வரை ,கருத்துச் செறிவு இருக்கும் பின்னோட்டங்கள் தொடரும் வரை…எவரும் பங்கெடுத்துக் கொள்ளலாம்..வருக.பயன்பெறுக

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s