Just another WordPress.com site

Posts tagged “சென்னை மழை வெள்ளம் போல எங்கள் மாவட்டங்களில் எல்லாம் வெள்ளம் வந்திருந்தால

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே? கவிஞர் தணிகையின் 1166-ஆம் பதிவு

 

 

 

 

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே? கவிஞர் தணிகையின் 1166-ஆம் பதிவு

மறுபடியும் பூக்கும்

எம்.ஜி.ஆர் அவர்களின் “எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?சொந்த நாட்டிலே…99 வது பிறந்த நாளில் அவரின் இறப்புக்கும் பின்28 ஆண்டுகள் ஆனபின்னும் தேர்தல் அருகாமையில் இருப்பதால் இந்தப் பாடல் விருப்ப பாடலாக கேட்காமலேயே காதில் கேட்டுக் கொண்டிருக்கிறது.எம்.ஜி.ஆர். கூட ஒரு வகையில் பார்த்தால் நல்லவர்தான்.ஆனால் சந்திரபாபு, அசோகன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.ஆர்.ராதா போன்றோர்கள் அவரை வேறு வகையாகத் தான் சொல்லி இருந்தார்கள். ஆனால் அவரின் தர்மம் இன்னும் பேசப்படுகிறது.அடுத்து 100 வது பிறந்த நாளை தமிழக அரசின் ஆட்சிக் கட்டில் ஏறி இன்னும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என முதல்வர் தமது தொண்டர்களை தட்டி எழுப்பி தூங்காதே தம்பி தூங்காதே என எழுப்பி இருக்கிறார்.

இராமாவரம் தோட்டத்தில் வெள்ள நீர் புகுந்து வடியாததைக் கூட கண்டு கொள்ளாத தமிழக அரசு இன்று மாநிலம் எங்கும் அவரின் என்றும் பசுமையான பாடல்களை ஒலிபரப்பி வருகிறது.போன மாதம் நினைவு நாள்.இந்த மாதம் அவரின் பிறந்த நாள். அடுத்த மாதம் அவருடன் 14 வயதிலேயே ஆயிரம் அடிமைகளுக்கு தலைவியாக ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இணையான செல்வி என்று முன்பு அழைக்கபட்ட இந்நாளில் அம்மா என அழைக்கப்படும் 67 வயது முதல்வரின் 68 ஆம் பிறந்த நாள் இதை விட சிறப்பாக அவரின் பக்தர்களால் கொண்டாடப் படும் என இப்போதே சுவர் எழுத்துகளை பார்க்க முடிகிறது அதன் உள் நோக்கத்தில் நமக்கு எம்.எல்.ஏ வுக்கு நிற்க சீட்(தொகுதி ஒதுக்கீடு) கிடைத்தால் பரவாயில்லை என்ற நோக்கமும் ஏக்கமும் இருப்பதை பார்க்க முடிகிறது.

ஒரு புறம் டாஸ்மாக்கை பொங்கலில் இலக்கு வைத்து வியாபாரம் பெருக்கிக் கொண்டு,தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா? இல்லை நீ தான் ஒரு மிருகம்,இந்த மதுவில் விழும் நேரம்…என்று பாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் என்ன சொல்வதென்றே தோன்றவில்லை.எம்.ஜி.ஆர் எல்லாருக்குமே பெரும்பாலும் நல்லவர் ஆனால் பகைத்துக் கொண்டால் அவர்கள் வாழ வழி இல்லாமல் போகுமளவு அன்றே அவருக்கு செல்வாக்கு. ஒரு சொல்வாக்கு போதும் என்ற நிலை இருந்தது. அதை வென்றவர் அவருடன் ஜோடியாக இணையாக நடித்த அம்மா ஜெ அவர்களை சொல்லலாம். கலைஞர் கருணாநிதி கூட மு.க.முத்துவை வைத்து எவ்வளவோ பிள்ளையோ பிள்ளை என முயற்சி செய்து பிள்ளையோ பிள்ளை கொள்ளையோ கொள்ளை என பட்டம் சூட்டிக் கொண்டார்.அதே எம்..ஜி.ஆர் தம்மை வாழவைத்த குடும்பத்தை சார்ந்த எம்.கே.இராதா என்ற சந்திரலேகா கதாநாயக நடிகரின் காலில் பொதுமேடையில் காலில் விழுந்து வணங்கினார் என்பது அவரது மரியாதையை பயபக்தியை நன்றி மறவாமையைக் காட்டும் நிகழ்வு.

காலத்தை எவருமே பின்னோக்கி நகர்த்தவே முடியாது. எம்.ஜி.ஆர் ஆட்சி, அண்ணா ஆட்சி, காமராஜர் ஆட்சி, கக்கன் ஆட்சி என்பதெல்லாம் கடந்து போன கால நிகழ்வுகள். எனவே கலைஞர் ஆட்சி, அம்மா ஆட்சியை எப்படி முன்னிறுத்துவது என்ற கவலை தான் இப்போது இவர்களுக்கு.

நல்ல கண்ணு, பெரியாரையும் அண்ணாவையும் வைத்து இவர்கள் பிழைக்கிறார்கள், கட்சி நடத்துகிறார்கள் என்பது போல எம்.ஜி.ஆரை வைத்து இவர்களும் தேர்தலை தம் பக்கம் இழுக்க நினைக்கிறார்கள். நல்ல கண்ணு போன்றவர்கள் சொல்வதில் தவறு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. அவர் போன்ற பெரியவர்களை கொச்சைப்படுத்தி எவருமே பேசவேண்டியதில்லை நமது முக நூல் நண்பர்கள். ஏன் எனில் அவர் எல்லாம் கலைஞர் போல எந்த வித குடும்ப விதியிலும் நாட்டை கொண்டு சென்றதில்லை. இப்போது மக்கள் முன் இருக்கும் வாய்ப்பே எவர் குறைவான குற்றமுடையாராய் இருக்கிறார் அவரைத் தேர்வு செய்ய முடியுமா என்று பார்ப்பதே. சோ சொல்வதில் ஒன்றை மட்டும் எடுத்துக் கொள்ளலாம் அது கலைஞர் முன்பே ஸ்டாலினிடம் பொறுப்பை விட்டுக் கொடுத்திருக்க வேண்டும். இன்னும் தாமேதாம் முதல்வர் என்று சொல்லி அவரை தடுத்து வருவது சரியில்லைதான்.

 

 

எம்.ஜி.ஆரை எடுத்துக் கொண்டால் ஒரு தமிழக சரித்திரத்தில் புதிய அலையை தி.மு.க வின் கலைஞருக்கு எதிராக உருவாக்கி சாதித்தார். கட்சி உருவானது. அவருடன் இருந்த அண்ணாவுக்கு தம்பிகள் இருந்தது போல கே.ஏ .கிருஷ்ணசாமி, நாஞ்சில் மணோகரன், காளிமுத்து, இப்படி பல தம்பிகள் இருந்து தோள் கொடுத்தனர். இவரை பாடலில் தூக்கி விட்ட பட்டுக்கோட்டை, உளுந்தூர் சண்முகம்,கண்ணதாசன், வாலி, குருவிக் கரம்பை சண்முகம், நா.காமராசன், புலமைபித்தன் ,முத்துலிங்கம் இப்படி எல்லா கவிஞர்களுமே இவரை ஏற்றி வைத்து தாமும் புகழ் பெற்றனர் சினிமா வார்த்தைகளில் பாடல்களில்.

அவரும் முயன்றார் ஏழை மக்களுக்கு ஒரு நல்லாட்சி தருவதற்கு காமராஜர் போல. ஆனால் முடியவில்லை. சிலரை தோட்டத்தில் கூப்பிட்டு அடித்து கூட இருக்கிறார் தமது மந்திரி,எம்.எல்.ஏ போன்ற தவறு செய்தோரை என கேள்விப்பட்ட செய்திகள் உண்டு. அவர் கூட ஆரம்பத்தில் பதவி ஏற்கலமா இல்லை நாஞ்சில் மணோகரனை முதல்வராக்கி தாம் கட்சியில் இருந்து கொண்டு ஆட்சியில் பின் இருந்து கொண்டு இயக்கலாமா என்றெல்லாம் யோசனை செய்ததாக எல்லாம் அப்போது மக்கள் குரல், போன்ற அவரது கட்சி ஏடுகள் எழுதியதுண்டு. கடைசியில் மதிய உணவு என்றிருந்ததை சத்துணவு என்றாக்கி ஏழை பள்ளி மாணவர்களுக்கு நேரிடையான அரசுத் திட்டம் சென்றடைய வழி வகுத்தார் அதிலும் எத்தனை சத்துணவு ஊழியர் உண்மையாகவே எத்தனை பள்ளிகள் ஒழுங்காக இருக்கின்றன என்பவை எல்லாம் இந்நாளில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய விஷியங்களே…

ஆனாலும் அவர் இருக்கும் வரை மக்கள் செல்வாக்கு அவருக்கு அப்படியே இருந்தது. மத்திய ஆட்சித் தேர்தல் போது அவருக்கு மக்கள் அவர் எதிர்பார்த்தபடி வாக்களிக்க வில்லை என்றாலும் மாநிலத் தேர்தலில் தவறாமல் ஏகோபித்து வாக்களித்தார்கள் என்னதான் தி.மு.க சென்னை போன்ற நகர் புறங்களில் செல்வாக்கு பெற்று வென்றாலும் இவரின் செல்வாக்கு கிராமப்புறங்களில் அசைக்க முடியாதிருந்தது.

 

இவர்தான் என்.டி.ஆர் போன்றவர்களுக்கெல்லாம் முன்னோடியாயிருந்தார். சினிமாத் துறையில் நடிகராக இருந்து முதல்வரானவர் வரிசையில் முதல்வர்.. கோவாவில் ஒருமுறை மக்கள் இவரை மலையாளத்தில் பேசச் சொல்லும்போதும் இவர் தமிழ் மக்கள் தான் என்னை வாழவைத்தவர்கள் என்று தமிழில்தான் பேசினாரம். மேலும் கர்நாடகா குண்டு ராவின் ஆட்சியின் போது விருந்தை முடித்து விட்டு நீர் மட்டும் தாம் கொண்டு வந்த நீரையே பருகிக் கொள்கிறேன் கர்நாடகாதான் தமிழகத்துக்கு நீர் கொடுக்க மறுக்கிறதே என உணர்த்தினாராம்.

இந்த மனிதர் பெரும்பாலான தமது நடிப்பு உழைப்பிலிருந்து வந்த ஊதியத்தை மக்களுக்கு சக உழைப்பாளருக்கு அண்ணா இருந்த போதே தி.மு.க கட்சிக்கு இப்படி பங்கிட்டதும், மேலும் தமது சொத்து வேர் யாவுமே தமிழ் மண்ணிலேயே என்று வாழ்ந்ததும் இவரின் செல்வாக்கு மேலும் மேலும் வளர காரணம் ஆயிற்று.

இன்று சட்டசபையில் ஒரு முஸ்லீம் நண்பர் ,பேசுகிறார், கடலூர், சென்னை மழை வெள்ளம் போல எங்கள் மாவட்டங்களில் எல்லாம் வெள்ளம் வந்திருந்தால் அரசின் அம்மாவின் நிவாரணப்பணி எங்கள் மாவட்டங்களுக்கும் கிடைத்திருக்குமே என்று அம்மா மனங்குளிர, உச்சி குளிர, முகமெல்லாம் மலர தொகுதி உடன்பாட்டுக்கு அச்சாரம் போட்டு..மேலும் பலரும் எல்லா மாநிலங்களிலும் மதுவிலக்கு நடக்கட்டும் அதன் பின் தமிழகத்தை கேளுங்கள் என்கிறார் சரஸ்வதி போன்றோர், அம்மா அம்மா என கீழே விழ்ந்து புரள்கிறார்கள், அழுகிறார்கள், தற்கொலையும் செய்து கொள்கிறார்கள்.

எம்.ஜி.ஆரை விட அம்மாவின் மேல் பைத்தியக்காரத்தனமான உன்மத்தம் ஏறியிருப்பதாகவே காலம் சொல்கிறது. அம்மாவும் கருணாநிதிக்கு கலைஞர் அடைமொழியும், விஜய்காந்துக்கு கேப்டன் அடைமொழியும், இராமதாசுக்கு மருத்துவர் அய்யா என்பதும் எம்.ஜி.ஆருக்கு மக்கள் திலகம், என்றும் இருந்தது போல அமமா என்ற அடைமொழியும் தங்கட்டும் என வெகு பாடுபட்டு வருகிறார். ஸ்டிக்கர் ஒட்டச் சொல்லியும் எல்லாவித இடங்களிலும் இவர் படத்தை சான்றிதழ்களில் கூட ஒட்டச் சொல்லியும்…

சோ ராமசாமி போன்றவர்கள் தமது பிரச்சாரத்தை குடும்ப அரசியல் வேண்டாம் திமுக வேண்டாம் மீண்டும் அம்மா ஆட்சி வேண்டும் என்பதைப்பார்த்து வாக்களியுங்கள் என சொல்லியுள்ளார். அம்மாவுக்கு வெள்ள நிவாரணப்பணிகள் அவ்வளவு பேரைக் கெடுத்துள்ள போதிலும், ஆளும் கட்சி நிறைய ஊடக பிரச்சாரத்தை பிரச்சனைகளை திசை திருப்ப ஏகமாக முடுக்கி விட்ட போதும் தேர்தல் பயம் இருப்பதை இந்த எம்.ஜி.ஆர் வணக்கத்தின் மூலமும் நாம் காணலாம்.ஒரு கட்டத்தில் மேடையில் ஒரே ஒரு இருக்கை மட்டுமே இருக்க பொதுக்கூட்டங்கள் நடந்த காலம் எல்லாம் உண்டு.

சசிபெருமாள், ஈ.வி.கே.எஸ்,கோவன், பீப், இளையராஜா,விஜய்காந்த் த்தூ, மேலும் வெள்ளம் மழை எல்லாமே 1100 கோடி தியேட்டர்கள் விவகாரம், சொத்து சேர்த்த வழக்கு எல்லாவற்றையும் மறக்க மக்கள் தேர்தலில் பிரிந்து கிடக்கும் வியூகத்தில் எளிதாக வென்றுவிடலாம் என்ற நிலை இருந்தபோதும் அப்படி வெல்ல முடியுமா வெள்ள நிலை தொடருமா என்ற சந்தேகப்பாடு இருப்பதால் ஒரே பயம் எனவே எம்.ஜி.ஆர் மறுபடியும் புகழ் ஏணிக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்.

ஏன் எனில் இதே எம்.ஜி.ஆரை இவர் (ஜெ) திட்டி கேவலப்படுத்திய சம்பவங்கள் இருப்பதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஏன் எம்.ஜி.ஆருக்கு சுய எதிராக சுய சரிதை தொடர் எழுத முயன்றபோதெல்லாம் எம்.ஜி.ஆரால் ஏதோ ஒரு வகையில் சரிக்கட்டப்பட்டு எழுத்தாளர், பாடகர், ஜெ. அவர்களின் வார மலர் தொடர் வெறும் விளம்பரத்தோடு நின்று போன நிகழ்வெல்லாம் காலத்தின் பதிவில் உண்டு. கட்சியில் பதவி தராதபோது, இவரை அடுத்து சினிமாவில் நிர்மலா, லதா, மஞ்சுளா, ராதா சலூஜா, சந்திரகலா என ஒரு படத்துக்கு ஒரு புதுமுக நடிகையரை எம்.ஜி.ஆர் அறிமுகப்படுத்தியபோதெல்லாம். எம்.ஜி.ஆருக்கு இந்த சினிமாக் கவர்ச்சி உண்டு அது அஞ்சலி தேவி, பண்டரி பாய், ஜானகி, பானுமதி,ஜெயலலிதா, கே.ஆர். விஜியா, வடநாட்டு நடிகைகள், லதா, மஞ்சுளா, இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

அப்போதெல்லாம் இவருக்கு எம்.ஜி.ஆர் மேல் வேறுபட்ட கண்ணோட்டம் இருந்தது என்பதை தெரிந்து கொள்ள முடியும். இவரும், வைரம்,அசோகன் ஜெய்சங்கர், சோபன் பாபு, ரவிச்சந்திரன், என எல்லாருடனும் நடித்து வந்தவர்தான். நடிகைக்கு வாய்ப்பு வரும்போது நடிப்பது என்பது இயல்பானதுதானே. ஆனால் இவர் தமிழக முதல்வரானதும், சசிகலா நடராஜன் கூட்டணிகளும் பெரும் மாறுதல் இவர் வாழ்வில் உண்டு பண்ணி விட்டன. எல்லாரும் போல இவரும் நடிகை மட்டுமல்ல.தமிழக முதல்வர் என்ற பதவி இவருக்கு சாதாரணமாக கிடைக்கவில்லை. அதற்கு இவர் எடுத்துக் கொண்ட முயற்சி பெரிதுதான்.

சாதரண நடிகையர் எல்லாம் செய்ய முடியாததை இவர் செய்து காட்டி சேவலை வைத்து புறாக்களை வென்று செங்கோட்டையன், திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் இராமச்சந்திரன் போன்றவர்களால் காப்பற்றப்பட்டு இயக்கத்தை வலுப்படுத்திக் கொண்டு ஜானகி அணியை அப்படியே அப்புறம் தள்ளி வந்து விட்டார் இலக்கு நோக்கி. இப்போது இவர் மறுபடியும் தமிழகத்தின் முதல்வர் பதவியில் அமர வாய்ப்புக் கிடைத்தால் அது ஒரு சாதனை எம்.ஜி.ஆர் போல தொடர்ந்து இரு தேர்தலிலும் வென்ற சாதனை. இது வேறு எவருக்குமே காங்கிரஸ் காலத்திற்கு பிறகு நடப்பில் இல்லை.

அம்மா பேர் சொல்லி ஏகப்பட்ட விளம்பரங்களும் திட்டங்களும்,இப்போது..ஆனா குன் ஹா தீர்ப்பு வழங்கி மைசூர் பார்ப்பன அக்ரஹாரச் சிறையில் இவர் இருந்தபோது நாட்டில் இவரது கட்சியினர் எல்லாம் உச்சத்தில் சோகத்தில் இருந்தனர். சிலர் உயிர்களையும் போக்கிக் கொண்டனர். ஒரே களேபர மயம். எங்கு பார்த்தாலும் அமைதியின்மை நிலவியது. எனவே இவர் கைது செய்யப்படுவதை விட எப்போதும் போல் இருந்தால் அது பொதுமக்களுக்கும் நல்லது என்ற அளவுக்கு இவரது கட்சியினரின் செயல்பாடுகள்.

எனவே இந்திய அரசியலில் அதுவும் தமிழக அரசியலில் இந்த தேர்தல் எல்லாரையுமே திகைக்க வைக்க ஒரு தேர்தலாய் காத்திருக்கிறது. மூன்றாம் அணி கணிசமாக வாக்குகள் பெற்று தொகுதிகளை வென்றால் நிச்சயம் ஒரு கலப்பணி கூட்டணி மந்திரிசபை அமையலாம். அல்லது வழக்கம்போல தமிழகத்தில் தி.மு.வா அல்லது அ.இ.அ.தி.மு.கவா என்பதுதான் கேள்வி பதிலாக இருக்கும்.

தே,மு.தி.க, பா.ம.க போன்றவை ஆட்சி அமைவை தீர்மானிக்கும் சக்திகளாக தொகுதிகளைப் பெறுமா என்பதில் அணி சேர்க்கை என்பதே காரணிகளாக இருக்கும். அல்லது 3ஆம் அணி, பா.ம.க,தே.மு.தி.க எல்லாம் சேர்ந்து தொகுதிகளை கணிசமாக பங்கிட்டால் வாக்கு அப்படி விழுந்தால் தி.மு.க அல்லது அ.இ.அ.தி.மு.க சார்பாக கணிசமாக தொகுதிகள் இல்லாதபோது கூட்டணி மந்திரி சபை அமையலாம். ஆனாலும் தி.மு.கவும் அ.இ.தி.மு.கவுமே வலுவான சக்தியும் அணியுமாக வழக்கப் படி திகழும்.

இது தமிழகத்துக்கே ஒரு சோதனைக் காலமான தேர்தலாக இருக்கும்.அ.இ.அ.தி.மு.கவுக்கு வாய்ப்பு இருப்பதாகத் தோன்றினாலும் இதன் மேலிருக்கும் அதிருப்தி தி.மு.கவுக்கு வாய்ப்பாக மாறுவதற்கும் சாத்தியக் கூறுகள் இல்லாமல் இல்லை.

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே? சொந்த நாட்டிலே?

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.